பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் நடத்தும் வருடாந்திர தேசியக் கருத்தரங்கம்-2020.இந்தியாவில் பார்வையற்றோர்: கலை, பண்பாடு, களச்செயல்பாடுகள்! |
முன்வரைவு அனுப்ப கடைசி நாள்: 10 டிசம்பர் 2019.
தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளுக்கான அறிவிப்பு வெளியாகும் நாள்: 15 டிசம்பர் 2019.
கட்டுரையை முழுமையாக சமர்ப்பிக்க கடைசி நாள்: 4 ஜனவரி 2020.
பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் 1980-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பார்வை யற்றவர்கள் சமுதாயத்தில் தற்சார்புடனும் சுயமரியாதையுடனும் சமுதாய அங்கீகரிப்புடனும் வாழ தேவையான முன்னெடுப்புகளை இச்சங்கம் தொடர்ந்து மேற்கொண்டுவருகிறது. கல்வி, பணி வாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகளுக்காக கடந்த நாற்பது ஆண்டுகளாக பல களப் போராட்டங்களையும், சட்டப் போராட்டங்களையும் நடத்தி பார்வையற்றோரின் உரிமைகளை நிலைநாட்ட பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தொடர்ந்து பணியாற்றிவருகிறது. போராட்டங்கள் வாயிலாக கல்வி, பணிவாய்ப்பு தொடர்பான பல அரசாணைகளையும், வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்ற வழிகாட்டுதலையும் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இத்தகு சிறப்பிற்குரிய பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் பார்வையற்றோர் தொடர்பான படைப்புகளை வரலாற்றில் பதிவு செய்து, சமூக மாற்றத்திற்கு வித்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில் வருடாந்திர தேசியக் கருத்தரங்கினை நடத்தி வருகிறது. அதன்படி சங்கத்தின் நாற்பதாவது ஆண்டுவிழாவை முன்னிட்டு “இந்தியப் பார்வையற்றோர்: கலை, பண்பாடு, களச்செயல்பாடுகள்” என்ற தலைப்பில் 2020 ஜனவரி மாதம் தேசியக் கருத்தரங்கிணை நடத்தவும், அதனைத் தொடர்ந்து கருத்தரங்க கட்டுரைகளைத் தொகுத்து ISBN எண்ணுடன் நூலாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளது.
பார்வையின்மையையும் பார்வையற்ற மாந்தரையும் கலை வடிவங்கள் தமது பேசுபொருள்களாக பன்னெடுங்காலமாகவே அமைத்துக்கொண்டுள்ளன. இலக்கியம், இசை, நாடகம், நடனம், ஓவியம், சிற்பம் என கலையின் பல்வேறு பரிமானங்கள் பார்வையற்றோரை படைப்புகளின் நேரடியான மாந்தராகக் கொண்டுள்ளன. வடமொழியில் திரிதிராஷ்டன்,, கிரேக்கத்தில் டெரீஷியஸ் என அத்தகைய பார்வையற்ற கதைமாந்தரின் பட்டியல் நீள்கிறது. நவீன இலக்கியப் படைப்புகளும் திரைப்படங்களும் ஏராளமான பார்வையற்ற பாத்திரப் படைப்புகளை உருவாக்கி உலவவிட்டுள்ளன. கலை இலக்கியப் படைப்புகளில் பார்வையின்மை குறித்த கற்பிதங்களும் கருத்தியல்களும் உவமை, உருவகம், குறியீடு,, படிமம் என பல்வேறு நிலைகளில் பயின்று வந்திருப்பதையும் எளிதில் அவதானிக்கலாம். கல்லாதோர் கண்களை ‘புண்கள்’ என உவமை சொல்லும் வள்ளுவரும், குறிக்கோளற்ற விடுதலையை ‘காற்றில் கைவீசும் குருடனுக்குச் சமம்’ என உருவகப்படுத்தும் தாகூறும், பார்வையின்மையை ஒரு துன்பியல் நிகழ்வாகவும் பரிதாபக் காட்சிகளின் கிடங்காகவும் பயன்படுத்திவரும் திரைப்படங்களும், தொலைக்காட்சி நெடுந்தொடர்களும் இத்தகைய சித்தரிப்புகளுக்கு வெளிப்படையான சான்றாகின்றன.
கலை இலக்கியத்தின் தோற்றுவாயான பண்பாட்டு வெளியிலும் பார்வையற்றோர் குறித்த புரிதல்களும் பார்வையின்மை தொடர்பான கருத்தியல்களும் பல்வேறு பரிமாணங்களில் காணப்படுகின்றன. “யானை தடவும் குருடன் போல’ என்று முழுமையற்ற புரிதலை ‘குருடனுக்கு’ தடவுவதால் கிடைக்கும் பிம்பத்திற்கு ஒப்பாகச் சொல்வது நமது பண்பாட்டு வழக்கு. பண்பாட்டைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மொழி, சமய நம்பிக்கைகள், சடங்குகள், குடும்ப அமைப்பு, திருமண முறைகள், உணவு, உடை, உடள்மொழி போன்ற பல்வேறு கூறுகளில் பார்வையற்றோர் பற்றிய கற்பிதங்களும் பார்வையின்மை குறித்த கருத்தியல்களும் வெளிப்படுகின்றன.’பார்வையற்றோர் அனைவரும் நன்றாகப் பாடுவார்கள்’ என்பதும், ‘பார்வையின்மை பாவத்தின் சம்பளம்’ அல்லது ‘ஊழ்வினைப் பயன்’ என்பதும், ‘பார்வையற்ற பெண்கள் தம்மைத் தற்கார்த்துக்கொள்ள இயலாத அபலைகள்’ என்பதும் அவ்வாறு நிலவும் கருத்தாக்கங்களின் பட்டீயலில் வெகுசிலவே. பார்வையற்றோர் மற்றும் பார்வையின்மை குறித்து குடும்பங்கள், சமய நிறுவனங்கள் உள்ளிட்ட பண்பாட்டு அமைப்புகள் சமூக வரலாற்று அடிப்படையிலும் அரசியல் பொருளாதார நிலையிலும் பல்வேறு மாறுபட்ட சிக்கலான கருத்தியல் புரிதல்களை ஏற்படுத்திக்கொண்டுள்ளன.
கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டு நடவடிக்கைகளில் பார்வையற்றோர் வரலாறு நெடுகிலும் குறைந்த அளவிலேனும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். தமிழில் பாடல்கள் புனைந்த இரட்டைப் புலவர்களுள்ஒருவரான பார்வையற்ற இடைக்காலக் கவிஞர், ஆங்கிலத்தில் காவியங்கள் இயற்றிய மில்டன், கிரேக்கக் காவியங்கள் படைத்த ஹோமர், இடைக்கால வட இந்தியாவின் பக்தி இயக்கக் கவிஞர் சுரதாஸ் என பார்வையற்றோர் தமது கலை இலக்கியப் பங்கேர்ப்பின் மூலம் தமது எல்லைக்குள் பொதுப் பண்பாட்டில் சில மாற்றங்களையும் பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். அரசியல், சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வு பெற்ற பார்வையற்றோர் பலர் கடந்த இரு நூற்றாண்டுகளில் பார்வையற்றோர் இடையேயும் பொது சமூகத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை தமது பல்வகைப்பட்ட களச்செயபாடுகளால் ஏற்படுத்தியுள்ளனர். பிரெயில் எழுத்து முறையை வடிவமைத்த லூயி பிரெயில், அமெரிக்க எழுத்தாளர் ஹெலன் கெல்லர், பார்வையற்றோருக்கான முதல் கல்லூரியை உருவாக்கிய பிரான்சிஸ் ஜோசப் கெம்பல், அமெரிக்காவில் உருவான கறுப்பின பார்வையற்றோரின் இசைக்குழுக்கள், பல்துறை ஆளுமை பெற்ற டாம் சல்லிவன், ஹிந்தி இசைமேதை ரவீந்திர ஜேன், தமிழில் கவிதைகள் புனைந்து வரும் கவிஞர் பெருமக்கள் மற்றும் எழுத்தாளர்கள், இந்தியாவில் தொடுவரைபடக் கலையை பயிற்றுவித்துவரும் ஐஸ்வரியா பிள்ளை, வைக்கம் விஜயலக்ஷ்மி போன்ற திரையிசைப் பாடகர்கள் தமது கலை இலக்கியப் பங்கேர்ப்பின் மூலம் செயல்பாட்டாளர்களாக மாறியுள்ளனர். பார்வையற்றோரின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைத்துவரும் பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம், பார்வையற்றோரின் உரிமைகளை பெருவதற்குப் போராடிவரும் பிற அமைப்புகள், வழக்குரைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பார்வையற்றோர் மற்றும் பார்வையற்றோர் மீது அக்கறை கொண்ட பலரது கலச்செயல்பாடுகளாலேயே பண்பாட்டுத் தளத்திலும் சமூகப் பொருளாதார நிலையிலும் பார்வையற்றோர் பங்கேற்பும், பார்வையற்றோர் அல்லது பார்வையின்மை குறித்த புரிதலும் கருத்தியலும் பெருமளவு மாறி தற்போது ஓரளவு நேர்மறைச் சிந்தனை மேலோங்கியுள்ளது.
மேற்கண்ட பின்னனியில், இந்தியாவில் கலை மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்றோர் குறித்த பாத்திரப் படைப்புகள், பார்வையின்மை குறித்த கருத்தாக்கங்கள், பொதுபுத்தியில் நிலவும் கற்பிதங்கள், கலை, பண்பாடு, சமூகப் பொருளாதாரம் ஆகிய நிலைகளில் பார்வையற்றோரின் கலச்செயல்பாடுகள் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் ஆகியன குறித்த ஆழமானதும் பரந்துபட்டதுமான விவாதங்களை முன்னெடுக்கும் முயற்சியாக அமைகிறது 2020-ஆம் ஆண்டுக்கான பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வருடாந்திர தேசிய கருத்தரங்கம். இக்கருத்தரங்கில் இடம்பெறுவதற்கான கட்டுரைகள் வரவேர்க்கப் படுகின்றன. கட்டுரைகள் கீழ்க்காணும் தலைப்புகளை ஒட்டி அமையலாம்:
1. இந்திய அளவில் கலை இலக்கியம், சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், இசை, நடனம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பார்வையற்றோர் மற்றும் பார்வையின்மை குறித்த சித்தரிப்புகள்
2. இந்திய கலை இலக்கியப் படைப்புகளில் பார்வையற்ற பாத்திரங்கள்
3. கலை இலக்கியங்களில் இந்திய பார்வையற்றோரின் படைப்புகள், பங்கேற்புகள்
4. இந்திய பார்வையற்ற பெண்கள், பார்வையற்ற-காதுகெலாதோர், சாதிய, சமூக, பொருளாதார நிலையில் அடித்தட்டில் உள்ள பார்வையற்றோர் குறித்த கலை இலக்கியச் சித்தரிப்புகள், பாத்திரப் படைப்புகள், அவர்தம் பங்கேர்ப்புகள்
5. பார்வையற்றோருக்கான சங்கங்கள், அமைப்புகள் மற்றும் செயல்பாட்டாளர்களின் பங்களிப்புகள் (எந்த ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சேவை நடவடிக்கைகள் குறித்த தனிப்பட்ட கட்டுரைகளைத் தவிர்க்கவும்)
6. ஊனமுற்றோர் சட்டங்கள் தொடர்பான பார்வையற்றோரின் கலச்செயல்பாடுகள்
7. பார்வையற்றோர் கல்வி, பணிவாய்ப்புகள், பனிச்சவால்கள் போன்றவற்றில் மாற்றங்களை ஏற்படுத்திய கலச்செயல்பாடுகள்
8. குடும்பம் மற்றும் திருமணம் ஆகியவற்றில் பார்வையற்றோர் குறித்த கருத்தியல்கள், அவற்றில் நிகழ்த்தப்பட்டுள்ள மாற்றங்கள்
9. பார்வையற்ற பெண்கள் உரிமைகள், கல்வி, பனிச்சவால்கள், அவர்கள் குறித்த பார்வைகளை மாற்ற முன்னெடுக்கப்பட்ட செயல்பாடுகள்
10. பார்வையற்றோரும் சமயம், மொழி உள்ளிட்ட பண்பாட்டு அடையாளங்களும்
11. பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சட்டப் பிரிவுகளின் வரம்பிற்குள் வரையறுக்கவியலாத பண்பாட்டுச் சவால்கள்
12. பிரெயில், தகவல் தொழில்நுட்பங்கள், உதவி உபகரணங்கள் போன்றவை பார்வையற்றோரிடையே ஏற்படுத்தியிருக்கும் பண்பாட்டுத் தாக்கங்கள்
13. பார்வையற்றோரின் தனித்துவமான கலை இலக்கிய மற்றும் பண்பாட்டு அடையாளங்கள்
14. மற்றும் பல.
கட்டுரையைப் பற்றிய சுமார் 300 சொற்களுக்கு மிகாத முன்வறைவை எதிர்வரும் டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் csgabseminar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தெரிவுசெய்யப்பட்ட கட்டுரைகளுக்கான அறிவிப்பு டிசம்பர் 15-ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். கட்டுரையை முழுமையாகச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் 4 ஜனவரி 2020. கண்டிப்பாக கால நீட்டிப்பு செய்ய வாய்ப்பில்லை. கட்டுரைகள் 2000 முதல் 3000 சொற்களுக்குள் அமைய வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஒருங்குறி வடிவில் csgabseminar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். பணியிலுள்ளோர் 800 ரூபாயும், நிதி உதவி பெரும் ஆய்வாளர்கள் 500 ரூபாயும், மற்றவர்கள் 300 ரூபாயும் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கருத்தரங்கம் 2020 ஜனவரி மாதம் நடைபெறும். கருத்தரங்கம் நடைபெறும் நாள், இடம், நேரம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
· பயன்படுத்த வேண்டிய மென்பொருள் / செயலி : மைக்ரோசாஃப்ட் வேர்டு
· பக்கங்கள் : 5 முதல் 8 வரை
· வரி இடைவெளி : 1.5
· தமிழ் கட்டுரை எழுத்துரு : லதா (ஒருங்குறி)
· தமிழ் கட்டுரை எழுத்துரு அளவு : 10
· ஆங்கில கட்டுரை எழுத்துரு : Calibri
· ஆங்கில கட்டுரை எழுத்துரு அளவு : 12
· கட்டுரையில் பயன்படுத்தப்படும் மேற்கோள்களுக்கு உரிய சான்றுகளை ஆய்வியல் விதிப்படி கட்டுரையின் இறுதியில் குறிப்பிட வேண்டியது அவசியம்.
· கட்டுரையாளர் பெயர் :
· கல்வி / பதவி :
· கல்வி நிறுவனம் / பணி இடம் / அமைப்பு :
· முகவரி :
· செல்பேசி எண் :
· மின் அஞ்சல் முகவரி :
· கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் முகவரி : csgabseminar@gmail.com
· வரைவோலை Demand Draft in favour of : COLLEGE STUDENTS AND GRADUATES ASSOCIATION OF THE BLIND, Payable at : Chennai.
முகவரி :
COLLEGE STUDENTS AND GRADUATES ASSOCIATION OF THE BLIND
Thakkar Bapa Vidhyalaya, 58, Venkatnarayana Road, T.Nagar, Chennai-600 017.
தொலைபேசி எண் : 044–24348628, 044-48548628.
இணையதளம் : www.csgab.org